ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறைகளை தகர்த்து தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவது தொடர்ந்து நடந்துள்ளதால் உலக நாடுகள் உஷாராக இருக்க வேண்டும் என்று இன்டர்போல் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
லிபியாவில் ஜூலை மாதம் 22ம் திகதி தீவிரவாதிகள் சிறையை தகர்த்து ஆயிரக்கணக்கான கைதிகளை தப்பயோட செய்தனர். ஈராக்கில் அபுகிரைப் சிறையை ஜூலை 27ம் திகதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி தங்களது கூட்டாளிகள் 100க்கும் மேற்பட்டவர்களை விடுவித்தனர். இதே போல் எகிப்து, ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளிலும் சிறைகள் மீது தாக்குதல் நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை விடுவித்து சென்றனர்.
இதுகுறித்து பிரான்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பொலிஸ் 'இன்டர்போல்' உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ´ரகசிய விசாரணையில் இந்த சிறை உடைப்பு சம்பவங்களுக்கு பின்னணியாக அல் கய்தா தீவிரவாதிகளின் சதி வேலை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்த சதி வேலையிலும் ஈடுபடலாம். அல் கய்தாவின் கூட்டாளிகள் 190 பேர் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களது கூட்டாளிகளை விடுவிக்க சந்தர்ப்பம் பார்த்து வருகின்றனர்.
எனவே உலக நாடுகள் உஷாராக இருக்க வேண்டும்' என்றார். இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், அமெரிக்க தூதரகங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ள தகவல் கிடைத்துள்ளதால், பல நாடுகளில் உள்ள தூதரகங்களை இன்று ஒரு நாள் அமெரிக்கா மூடியுள்ளது. இதனால் பல நாடுகளில் பரபரப்பு நிலவுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !