இலங்கையில் சட்டத்தை மீறிச் செயற்படுகின்ற பொலிசாருக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வராத காரணத்தினாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிசார் சட்டப்படியான தமது கடமைகளை செய்யத் தவறினாலோ அல்லது சட்டத்தை மீறிச் செயற்பட்டாலோ அதுபற்றிய முறைப்பாடுகளை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தமது பிராந்திய அலுவலகங்களில் மக்கள் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும் என்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது மாகாண பணிப்பாளர் அலுவலகங்களூடாகவோ அல்லது கொழும்பிலுள்ள தமது தலைமையகத்தினூடாகவோ முறைப்பாடுகளை பதிவுசெய்ய முன்வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
´2012- ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தான் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இயங்கத் தொடங்கியது. கடந்த ஆண்டில் 601 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றில் 591 பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. 2013-ம் ஆண்டில் இதுவரை 230 முறைப்பாடுகளில் 145 முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது´ என்றார் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது, பொலிசார் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக முறைப்பாடு வந்தால் அதுபற்றி விசாரணையை தொடங்க முடியும் என்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இலங்கை அரசியலமைப்பின் 17-ம் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள், 18-ம் திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டன.
அதன்படி, குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் உத்தியோத்தர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரிக்க மட்டுமே முடியும். ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கு அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. அத்தோடு பொலிஸ் மா அதிபரின் ஒத்துழைப்பும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குத் தேவைப்படுகிறது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு சுதந்திரமாக இயங்க முடியாத சூழ்நிலையே இருப்பதாக பல தரப்பிலும் சுமத்தப்படும் குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பியபோது, எந்தவிதமான அழுத்தங்களுமின்றி தாம் செயற்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஆரியதாச குரே கூறினார்.
இதேவேளை, முறைப்பாடுகளை உரிய முறையில் பதிவுசெய்யாமை, குற்றஞ்சாட்டப்படும் சந்தேகநபர்களுக்கு முறைப்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை வழங்குதல், பக்கச்சார்பாக செயற்படுதல், பொலிஸ் காவலில் வைத்து சித்திரவதை விசாரணை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை இலங்கை பொலிசார் மீது கடந்த காலங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்பாஸ் சம்பவத்தில் பொலிஸார் சட்டப்படி கடமையை ஆற்றாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யவில்லை என்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !