கருவி பட இயக்குனர் கபிலன் சே தனது படம் வெளியாகாத வருத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால் பலர் கலைந்த கனவுகள் பட இயக்குனர் கபிலன் தற்கொலை செய்து விட்டதாக செய்தி வெளியிட்டு விட்டதால் குழப்பமாகி விட்டது.
பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கபிலன் (28). சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். அவர் கடந்த 2012ம் ஆண்டு கபிலன் சே என்ற பெயரில் கருவி என்ற படத்தை இயக்கினார். ஆக்ஷன் த்ரில்லர் படமான அது நிதி பிரச்சினையால் வெளியாகாமல் போனது. முதல் படமே முடங்கியதால் கபிலனுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் பணக் கஷ்டத்தில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் வளசரவாக்கம் திருமலை நகரில் வசித்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சத்யாவை அவரது தாயாரின் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த உடன் மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு முதல் படம் வெளியாகவில்லை, கடன் தொல்லை தாங்க முடியவில்லை அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட சத்யா பதறியடித்து வளசரவாக்கம் வந்துள்ளார். ஆனால் அவர் வந்தபோது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு படுக்கையறையில் கபிலன் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கபிலன் சே தற்கொலை செய்து கொண்டது கலைந்த கனவுகள் இயக்குனர் கபிலன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பரவியது.
இதையடுத்து கலைந்த கனவுகள் கபிலன் தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார். இதேபோன்று தான் நேற்று நடிகை கனகா புற்றுநோயால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த கனகா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை வைத்து தான் உயிரோடு இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !