சென்னை: பண்ருட்டி அருகே கொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரின் மனைவியை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்றதாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன். 27 வயதான இவர் மருந்துக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்பனா. பண்ருட்டி அருகே உள்ள கொக்குப்பாளையம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர். இவர்களது முதலாமாண்டு திருமண நாளை கடலூரில் சில்வர் பீச்சில் வைத்துக் கொண்டாடி விட்டு மே 1ம் தேதி பைக்கில் பண்ருட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் வழிமறித்து சீனிவாசனைத் தாக்கியதாகவும், தனது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் கல்பனா போலீஸில் புகார் கூறினார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் தினேஷ் பாபு என்பவரும், அவரது நண்பரான முரளியும் சரணடைந்தனர். அதேசமயம், கல்பனா பண்ருட்டி வி.ஏ.ஓ. சரவணன் முன்பு சரணடைந்தார். இதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. கல்பனாவை போலீஸார் விசாரித்தபோது உண்மைவெளிவந்தது. தனது கள்ளக்காதலரான தினேஷ் பாபுவுடனஇணைந்து கணவரைக் கொன்றதாக தெரிவித்தார் கல்பனா. இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் விழுப்புரத்தில் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். தினேஷ் பாபுவுடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது.
எனக்குத் திருமணம் பிடிக்கவில்லை. இதனால் சீனிவாசனுடன் எப்போதும் சண்டை பிடித்தபடி இருப்பேன். திருமணத்திற்குப் பின்னர் சென்னைக்கு வந்து விட்டோம். இருப்பினும் எனது கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வார். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தினேஷ் பாபுவை சென்னைக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பேன். நான் அடிக்கடி செல்போனில் பேசுவது எனது கணவருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. என்னிடம் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் அவர் மீது கோபம் கொண்டேன். தினேஷ் பாபுவிடம் எனது கணவரைக் கொல்ல வேண்டும் என்று கூறி வந்தேன். இதையடுத்து திட்டம் தீட்டினோம். ஒரு முறை முயற்சித்தோம். அது தோல்வியில் முடிந்தது. நெய்வேலியில் வைத்துக் கொல்ல இன்னொரு திட்டம் தீட்டி வைத்திருந்தேன். இந்த நிலையில், பண்ருட்டியில் திருமண நாளைக் கொண்டாட வரும்போது கொலை செய்யத் திட்டம் தீட்டினோம்.
அப்போது ஒரு முயற்சி தோற்றது. இதையடுத்து கடலூர் போய் விட்டு வரும் வழியில் தினேஷ் பாபுவும், அவரது நண்பர் முரளியும் வழியில் வழிமறித்து எனது கணவரைக் கொலை செய்தனர். பின்னர் என்னிடம் கொள்ளையடித்தது போல நடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆனால் போலீஸார் எங்களை மோப்பம் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் கல்பனா.
இந்த வழக்கில் கல்பனாவை முதல் குற்றவாளியாக போலீஸார் சேர்த்துள்ளனர். தினேஷ் பாபுவுக்கு கொலை செய்யும் நோக்கம் ஆரம்பத்திலிருந்தே இல்லையாம். ஆனால் கல்பனாதான் தொடர்ந்து அவரை நச்சரித்து வந்துள்ளாராம். இதை தினேஷ் பாபு போலீஸில் தெரிவித்துள்ளார். கல்பனாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல்தான் கொலை செய்யும் முடிவுக்கு ஒப்புக் கொண்டாராம் தினேஷ் பாபு.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !