பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையற்ற பந்துகளை வீசிய குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அத்தோடு தனது நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
சல்மான் பட் இற்கு சர்வதேசக் கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்ட 10 வருடப் போட்டித் தடையில் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட தடை என்பதால் அவரால் 5 வருடங்களின் பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற முடியுமென்பதால், தான் இதுவரை 3 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதால், உள்ளூர்ப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட தனது நடவடிக்கை காரணமாக ஏமாற்றமடைந்த அனைவரிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்த சல்மான் பட், தனது நடவடிக்கை காரணமாக கிரிக்கெட்டின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காகவும் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிவரும் வீரர்கள் இவ்வாறான தவறுகளில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ள சல்மான் பட், இவ்வாறான தவறுகள் வீரர்களையும், கிரிக்கெட்டையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சல்மான் பட், மொஹமட் ஆமிர், மொஹமட் ஆசிப் ஆகியோர் முறையற்ற பந்தை வீசியமைக்காக முறையே 10, 5, 7 வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !