ஓசூரில் சொத்துக்காக பெற்ற தாயையே கூலிப்படை மூலம் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓசூரில் சொத்துக்காக பெற்ற தாயையே கூலிப்படை மூலம் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தஜிகூரை சேர்ந்தவர் பூ வியாபாரியான சஞ்சீவம்மா(வயது 60).
கடந்த 14ம் திகதி மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சஞ்சீவம்மாவின் மகள் முனிரத்னாவிடம் விசாரித்தனர். விசாரணையில் தனது கணவர் வெங்கட்ராஜுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் தனது தாயை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து முனிரத்னா, வெங்கட்ராஜ், திருச்சிப்பள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், தொரப்பள்ளியை சேர்ந்த முனிராஜ், முருகேஷ், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். முனிரத்னா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, எனக்கும், வெங்கட்ராஜுக்கும் திருமணமாகி ரூபா என்ற மகளும், சீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.
எனது தாய்க்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை நானும், எனது கணவரும் கேட்டோம். அதற்கு எனது தாய் தர மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். இதனால் எனது தாயை தீர்த்து கட்ட திட்டமிட்டோம். இதற்காக திருச்சிப்பள்ளியை சேர்ந்த ஜெகதீசை சந்தித்தோம். அதற்கு ஜெகதீஷ் ரூ. 1 லட்சம் கொடுங்கள், என் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அதனால் நான் நேரடியாக இந்த கொலைக்கு போக மாட்டேன். எனது கூலிப்படையை வைத்து நான் கொன்று விடுகிறேன் என்றார்.
அதற்கு நானும் சம்மதித்து எனது கம்மலை அடகு வைத்து ரூ. 18 ஆயிரத்தை ஜெகதீசிடம் கொடுத்தேன். அவர்கள் 14ம் திகதி இரவு என் தாயை கொன்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !