உலகிலுள்ள மிகச் சில விடயங்களைத் தவிர்த்து ஏனையவற்றிற்கு பிரதியீடு என்பது ஒருநாள் சாத்தியமாகும் என்பதை ஞாபகப்படுத்துவதாய் சில சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதுண்டு.
அந்த வகையில் அண்மையில் விஞ்ஞானிகள் பிரதியீடு என்ற விடயத்தை ஞாபகப்படுத்திய மற்றுமொரு விடயமாய் அமைந்துள்ளதே பக்டீரியாவிலிருந்து டீசல் என்ற புத்தம் புதிய சாதனை முயற்சி.
மனிதன் உயிர் வாழ நீர், நிலம், உணவு, ஒக்ஸிஜன் என்பது போன்ற அத்தியவசியமான சில விடயங்கள் தேவைப்படுகின்றது. அதுபோலவே இன்று மனிதன் இலகுவாகவும் ஆடம்பரமாகவும் உயிர் வாழ்வதற்கு பல விடயங்கள் அவசியமாய் இருக்கின்றது.
அவற்றில் எரிபொருளுக்கான தேவையென்பது தவிர்க்க முடியாததொன்று. இந்நிலையில் தற்போது பாரியளவில் தேவைப்படும் மூலமாக பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் காணப்படுகின்றன. ஆனால் எதிர்கால சந்ததிக்கு இவ்வகை எரிபொருட்கள் கிடைக்காது போய்விடும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
இருப்பினும் அவற்றுக்கு மாற்றீடாக இன்றுவரையில் எதுவிதமான நிரந்தரத் தீர்வுகளும் கிடைக்கவில்லை. இதனால் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைப் போல இவ்வகை எரிபொருட்களையும் கையிருப்பில் இருப்பவற்றை பாதுகாப்பதைத் தவிர புதிதாக உருவாக்க முடியவில்லை.
இதனால் எதிர்கால சந்ததிகள் பயன்படுத்த தேவையான ஆனால் அழிந்துகொண்டிருக்கும் விடயங்களில் ஒன்றாக இன்று எரிபொருட்கள் மாற்றமடைந்துவிட்டது. இந்நிலையில் விஞ்ஞானிகளின் அண்மைய கண்டுபிடிப்பொன்று சற்றே திருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனலாம்.
அதாவது ஈ கோலை எனும் ஒரு வகை பக்டீரியாவிலிருந்து டீசலை உருவாக்கி இங்கிலாந்து விஞ்ஞானிகள் அடுத்த சந்ததியின் நகர்வுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். தற்போது பரீட்சார்த்த அளவில் வெற்றி பெற்றுள்ள இத்திட்டம் விரைவில் பாரியளவில் சாத்தியப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பக்டீரியா உலகில் முதல் தோன்றிய உயிர் வடிவமாகும். பக்டீரியாக்களில் பல வகை உண்டு. அவ்வாறானா வகைகளில் ஒன்றே இந்த ஈ கோலை எனப்படும் பக்டீரியா. இவ்வகை பக்டீரியாக்கள் மனிதனின் பெருங்குடலில் பெருமளவில் காணப்படும். இவை k2 விற்றமினைத் தயாரித்து உடலுக்கு நன்மை பயக்க வல்லது. இதேவேளை ஈ கோலையிலுள்ள மற்றுமொரு வகை பக்டீரியா, உணவுகள் அல்லது குடி நீர் ஊடாக வயிற்றுக்குள் சென்றால் வயிறு சம்மந்தமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
இந்த பக்டீரியாவினை தற்போது இலகுவாக பெருக்கம் செய்து பாதுகாக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சிக்கூடங்களில் வளர்க்கும் பக்டீரியாவின் மரபணுவில் மாற்றத்தினை ஏற்படுத்தியே விஞ்ஞானிகள் டீசலினை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் டீசலானது. சாதரணமாக நாம் பயன்படுத்தும் குரூட் எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் டீசலைப் போன்றே இருக்கும். இவற்றுக்கிடையிலான வித்தியாசம் மிக மிகக் குறைவு என்கிறார்கள் இதனை கண்டுபிடித்த இஙகிலாந்திலுள்ள எக்செடர் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தெரிவிக்கின்றது.
எனவே இந்த உயிரியல் வகை எரிபொருளான டீசலைக்கொண்டு தற்போது பயன்பாட்டிலுள்ள டீசல் வாகனங்களை இயக்கவும் முடியும். இதன்போது வாகனத்தின் எஞ்சினுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள்.
இது குறித்து எக்செடர் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான துறை பேராசிரியர் ஜோன் லவ் கூறுகையில், இக்கண்டுபிடிப் பின் மூலம் தற்போது புழக்கத்திலுள்ள டீசல் வாகனங்களின் எஞ்சினில் எதுவித மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. வணிக ரீதியான எரிபொருட்களைப் போலவே இந்த உயிரியல் எரிபொருளும்.
வணிக ரீதியாக இந்த உயிரியல் எரிபொருளை வெளியிட்டு இப்போதிலிருந்து பயன்படுத்தினால் 2050ஆம் ஆண்டளவில் 80 வீதத்தினால் பச்சை வீட்டு வளைவு ஏற்படுவதனைத் தவிர்க்கலாம். எனவே இவ்வகை எரிபொருள் உலகின் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க தற்போதைய நிலைமையில் பாரியளவில் ஈ கோலை பக்டீரியா மூலம் டீசல் தயாரிப்பதில் பல தடைகள் காணப்படுகின்றது. அதாவது 200 லீட்டர் பக்டீரியாவிலிருந்து ஒரு மேசைக்கரண்டி அளவான டீசலையே தற்போது தயாரிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே பல்லாயிரம் லீட்டர்களை குறைந்த உற்பத்திச் செலவில் எவ்வாறு தயாரிப்பது என்பதே தற்போது ஆராய்ச்சியாளர்கள் முன்னுள்ள சவால் ஆகும். முடிந்தவனுக்கு நீரும் நெருப்பாகும் என்பதனை அடிக்கடி உணர்த்தும் விஞ்ஞானிகளுக்கு விரைவில் இது சாத்தியமாவது திண்ணம்.
இது தொடர்பில் இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் செல் ப்ரொஜக்ட் என்ட் டெக்னொலொஜியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ரொப் லீ கூறுகையில், தற்போது இக் கண்டுபிடிப்பில் பல தடைகள் இருப்பினும் எதிகாலத்தில் தேவைமிகு டீசலாக மாறி சூழலையும் பாதுகாக்கின்ற உயிரியல் எரிபொருள் கண்டுபிடிப்பில் பங்காளியாக இருப்பதில் பெருமைகொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிரியல் எரிபொருள் என்பது உலகிற்கு ஒரு புத்தம் புதிய விடயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பக்டீரியாவிலிருந்து டீசல் திட்டம் சாத்தியமானதொன்று என்பதனை புரிந்துகொள்ள முடியும்.
இலங்கையில் கூட 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிசரின் மரத்திலிருந்து உயிரியல் எரிபொருள் உற்பத்தி செய்யலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தற்போது இந்தியாவிலும் சில பகுதிகளில் காட்டாமணக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட டீசல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கனடாவில் கடந்த வருடன் 15 பேர் பயணிக்கக் கூடிய விமானம் ஒன்று கடுகு எண்ணெய் மட்டும் பயன்படுத்தப்பட்டு இயக்கி சாதனை படைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி சோளத்திலிருந்தும் எரிபொருள் தாயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் இது போன்ற உயிரியல் எரிபொருட்கள் பரந்தள வில் உற்பத்தி செய்ய பல்லாயி ரம் ஏக்கர் காணிகளில் தேவையான தாவரங்களைப் பயிரிட வேண்டி ஏற்படும். எனவே உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதுடன் பயிர் நிலங்களுக்கும் பயிர்களுக்கு மான முக்கியத்துவம் குறைந்து விடவும் வாய்ப்புண்டு. ஏனெ னில் எரிபொருளின் தேவை என்பது உயிரின் தேவை போல மாறிவிட்டதே காரணம்.
ஆனால் பக்டீரியாவிலிருந்து டீசல் என்ற திட்டம் அவ்வாறில்லை என்பதால் ''பக்டீரியா டீசல்'' உற்பத்தி தொழிற்சாலைகள் விரைவில் நிறுவப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகவே உண்டு.ஏற்கனவே பக்டீரியாவினைக் கொண்டு தயாராகும் ஈஸ்ட், சீஸ், யோகட், சோய் சோர்ஸ், பிக்கிள் மற்றும் வைன் என பலவகைப் பொருட்களை உண்டு, பருகி மகிழ்வதைப் போல விரைவில் பக்டீரியாவினூடாக ஆரோக்கியமான சூழலில் எம்மை வாகனங்களில் பயணம் செய்ய வைக்கவும் அறிவியல் உலகம் தயாரிகிவிட்டது. நாமும் அனுபவிக்க மட்டுமாவது தாயாராகிவிடுவோம்!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !