டேராடூன்: "உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியிருக்கும்' என, மாநில அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், முதல்வர், விஜய் பகுகுணா, "இறந்தவர்கள் எண்ணிக்கை, 1,000த்திற்குள் தான் இருக்கும்' என, தெரிவித்து வருகிறார்.
பலத்த மழை காரணமாக, நேற்று மீட்பு பணி துவக்கப்படவில்லை. இதனால், வெட்டவெளியில், பலத்த மழையில் தத்தளிக்கும், 15 ஆயிரம் பேர் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.
பக்தர்கள் பாதுகாப்பு:
கடந்த 17ம் தேதி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த பேய் மழையால், காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சுருட்டியது.வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியாத படி, நிலச்சரிவுகள் சரமாரியாக ஏற்பட்டதாலும், பக்தர்கள் வந்திருந்த வாகனங்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டடங்கள், இடிந்து விழுந்ததாலும், ஒரு லட்சம் பேர் தத்தளித்தனர். இரண்டு நாட்களாக அந்தப் பகுதியை யாருமே அணுக முடியாத நிலை ஏற்பட்டதால், உயிரிழப்பு அதிகரித்தது.மூன்றாவது நாளில் துவங்கிய மீட்புப்பணிகள், கேதார்நாத் தான் அதிக பாதிப்பை சந்தித்திருந்ததை படம் பிடித்துக் காட்டியது. பிரசித்தி பெற்ற கேதார்நாத் சிவன் கோவிலின் கர்ப்பகிரகம் தவிர, அனைத்து பகுதிகளும் சேதமடைந்திருந்தன.
ராணுவம், விமானப்படை, பேரிடர் மேலாண்மை குழு, எல்லை சாலை அமைப்பினர், ஹெலிகாப்டர்கள் உதவியுடன், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் வரை, 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால், ஹெலிகாப்டர்களை இயக்க முடியவில்லை.கங்கையின் துணை நதிகளிலும், காட்டாறுகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேலும் பல பகுதிகளில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை வழியே, எவ்வித பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால், இறந்தவர்கள் எண்ணிக்கை, 1,000தான் என, மாநில காங்கிரஸ் முதல்வர், விஜய் பகுகுணா திரும்பத் திரும்ப சொல்லி வந்த நிலையில், நிவாரணப் பணிகளுக்கான மாநில அமைச்சர், யஷ்பால் ஆர்யா, உண்மை நிலவரத்தை போட்டு உடைத்து விட்டார்.
மேலும் உயரலாம்:
"பேய் மழையாலும், நிலச்சரிவாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை, 5,000த்தை தாண்டியிருக்கும் என கருதுகிறோம். ஏனெனில், ஏராளமானோரை காணவில்லை. மீட்புப்பணிகளில், ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சுகிறேன்,'' என்றார்.
இதனால், "இமயமலையின் சுனாமி' என, வர்ணிக்கப்படும் இந்த இயற்கை பேரிடரில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து குழப்பமான நிலை நிலவுகிறது.இந்நிலையில், நேற்று காலை முதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள முடியாததால், காடுகளிலும், சமவெளிகளிலும், நடுங்கும் குளிரிலும், வெட்ட வெளியிலும், ஆங்காங்கே, குழுக்களாக தங்கியுள்ள, 20 ஆயிரம் பேரின் நிலை என்னவாகும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அவர்களுக்கு, ஒன்பது நாட்களாக உணவு, மருந்து கிடைக்காத நிலை காணப்படுவதால், பாதிப்பு பயங்கரமாக இருக்கும் என கருதப்படுகிறது.சகஸ்ரதாரா என்ற இடத்திலிருந்து தான், ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன. கேதார்நாத், பத்ரிநாத் பகுதியில் மழை பெய்து வருவதால், ஹெலிகாப்டர்கள் நேற்று மாலை வரை இயக்கப்படவில்லை. அது போல், சமோலி மற்றும் பாவ்ரி மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருவதால், அங்கிருந்தும் ஹெலிகாப்டர்களை இயக்க முடியவில்லை.
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று புதிதாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், நிலைமை மிகவும் மோசமாகப் போயுள்ளது. கேதார்நாத் பகுதியில், மிகக் குறைவாக, 5,000 பேர் வரை தான் காடுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம் என கருதப்பட்டது. அது போல், பத்ரிநாத் பகுதியிலும், 5,000 பேர் வரை மீட்கப்பட வேண்டியிருந்தது.அவர்களை தேடி மீட்க, நேற்று ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட இருந்தன; மழையால், அவ்வாறு செய்ய முடியவில்லை. இதனால், நிலைமை மோசமாகப் போயுள்ளது.இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண யாரும் முன்வராததால், அவற்றை ஆங்காங்கே, மொத்தம் மொத்தமாக தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 50 டன் விறகும், ஏராளமான நெய் போன்ற பொருட்களும் கேதார்நாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழுகி, சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் பிணங்கள், நேற்று மாலை முதல் எரியூட்டப்படுகின்றன.
கால்நடைகள் பாதிப்பு:
உத்தரகண்ட் பேய் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, மனித உயிர்கள், 5,000 பேர் வரை இறந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், கால்நடைகள் நிலைமையோ மிக மோசமாக உள்ளது.மலைகள் சூழ்ந்த அந்தப் பகுதியில், பொதுமக்கள் பயணம் செய்ய, ஏராளமான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. திடீர் வெள்ளப் பெருக்கில் அவை அடித்துச் செல்லப்பட, மிஞ்சிய குதிரைகள் ஆங்காங்கே, இரை தேடி சுற்றித் திரிகின்றன; அவற்றின் உடலில் காயங்களை காண முடிகிறது. ஆற்று வெள்ளத்தில், மாடுகளும் ஏராளமாக காணாமல் போயுள்ளன.
கிராமங்களில் சோகமயம்:
கேதார்நாத், பத்ரிநாத் போன்ற வழிபாட்டு தலங்களில், அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர், கடைகள் வைத்திருந்தனர், ஏராளமானோர், வழிகாட்டிகளாகவும், கார் ஓட்டுபவர்களாகவும் இருந்தனர். அவர்களில் பலரைக் காணாததால், அந்த வழிபாட்டுத் தலங்களை சுற்றியுள்ள கிராமங்களில் சோகம் நிலவுகிறது.வழிபாட்டுத் தலங்களை சுற்றி இருந்த, 60 கிராமங்கள், வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது: இதனால், அந்தப் பகுதிகளில், அதிர்ச்சி நிலவுகிறது.
அமெரிக்கர்கள் மீட்பு:
இந்து மதத்தின் பெருமைகளை அறியவும், கங்கை நதிக்கரையோரங்களில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடவும் வந்திருந்த, அமெரிக்கர்களில், 14 பேர், இமாச்சல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் சிக்கிக் கொண்டனர்.ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவர்கள் நேற்று மீட்கப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து, 200 பயணிகள், இமாச்சல பிரதேசத்தின் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு, சிம்லா போன்ற இடங்களுக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் வீரர்களின் தீரம்:
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை வீரர்கள், 2,000த்திற்கும் மேற்பட்டோர், உத்தரகண்ட் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், உத்தரகண்ட், இமாச்சல் போன்ற இமயமலைப் பகுதி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிறந்து, வளர்ந்த பூமியில் ஏற்பட்ட சோகத்தை அவர்களால் தாங்க முடியவில்லை.இதனால், விடுமுறையே கேட்காமல், நேரம் பார்க்காமல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அணுக முடியாத இடங்களையும் அவர்கள் எளிதாக அணுகி, அங்கே பரிதவித்து நிற்பவர்களை மீட்டு வருகின்றனர்.ஓய்வே இல்லாமல் அவர்கள் மேற்கொள்ளும் சேவை குறித்து, அந்த துணை ராணுவ பிரிவின் அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
ம.பி.,யில் 400 பேரை காணவில்லை:
மத்திய பிரதேசத்தை சேர்ந்த, 400 பேரை காணவில்லை என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பாரதிய ஜனதாவை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அந்த மாநில அரசு, தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஹெலிகாப்டர்களுடன், டேராடூனில் தங்கியிருந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுகின்றனர்.நேற்று மட்டும், 200 பக்தர்கள், சிறப்பு விமானத்தில், ம.பி., தலைநகர் போபால் அழைத்துச் செல்லப்பட்டனர்; இன்னும், 400 பேரை காணவில்லை என, கூறப்பட்டுள்ளது.
அந்தோணி, ராகுல் ஹெலிகாப்டர் பயணம் :
* ராணுவ அமைச்சர் அந்தோணி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் நேற்று உத்தராஞ்சல் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள், ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்தனர்.
* டில்லி காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து, ஏற்கனவே, 125 லாரி நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று, 24 லாரிகளில் நிவாரணப் பொருட்களை ஏற்றி, உத்தரகண்ட் அனுப்பி வைக்கப்பட்டது.
*பாதிக்கப்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நகை, பணத்தை சிலர் கொள்ளையடித்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. இதையடுத்து, சந்தேகத்திற்கு இடமானவர்களை சோதனையிட்டு, அவர்களிடம் உள்ள பணம், நகை குறித்து ராணுவத்தினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
*"பெல்' நிறுவன ஊழியர்கள், தங்களின் ஒரு நாள் சம்பளத்தை, உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !