தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ளது இன்பென்ட் ஜீசஸ் என்ஜினீயரிங் கல்லூரி. இக்கல்லூரி முதல்வர் சுரேஷ்(வயது 46) கல்லூரி வளாகத்திலேயே மாணவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கல்லூரி மாணவர்கள் நாசரேத் பிச்சைகண்ணு (20), நாகப்பட்டினம் பிரபாகரன்(19), சிவகங்கை டேனிஸ் (20) ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் புதுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் பிச்சகண்ணு அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு,
எங்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் தண்டனை வழங்குவார். 5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார்.
நாங்கள் 3 பேரும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை எங்களால் கட்டமுடியவில்லை.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு டேனிசையும், பிரபாகரனையும் தற்காலிக இடைநிறுத்தம் செய்தார். பெற்றோரை அழைத்து வந்தால்தான் கல்லூரியில் சேர்ப்பேன் என்று கூறியதால், 2பேரும் கல்லூரிக்கு பெற்றோரை அழைத்து வந்தனர்.
அப்போது பெற்றோர் முன்பு இரண்டு பேரையும் அவதூறாக பேசினார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் கடந்த 7–ம் திகதி என்னை தற்காலிக இடைநிறுத்தம் செய்தார். இது பற்றி கேட்ட போது, மாணவிகளை கேலி செய்ததால் இடைநிறுத்தம் செய்துள்ளேன் என்றார்.
இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது பெற்றோரையும் அழைத்து அவர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தினார். இது பற்றி நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனிடம் கூறினேன். அப்போது பெற்றோர் முன்பு அவமானபடுத்திய கல்லூரி முதல்வர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி நேற்று காலை கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றோம். கல்லூரி வளாகத்திற்குள் சென்ற போது அங்கு வந்த சுரேஷ் என்னை பார்த்து கடுமையாக திட்டினார்.
மேலும் என்னை படிக்க வைக்க விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனுடன் சேர்ந்து சுரேசை சரமாரி வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். கல்லூரி ஊழியர்கள் சேர்ந்து எங்கள் மூவரையும் பிடித்து பொலிசில் ஒப்படைத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை மற்ற மாணவர்களும் தெரிவித்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !